Tuesday, November 17, 2015

karthikdharmapuri

பிரபஞ்சன் சிறுகதைகளில் பெண்களின் மனித நேயம் பெ. சுமதி

மனிதரை நெருங்கி அவர்களைப் புரிந்து கொள்ளுதல்என்கின்ற பண்பு நம்மிடம் குறைந்து வருகின்றது. மனிதரை மதிக்க நமக்கு அவகாசம் இல்லை. ஆகவே நாம் மனிதரை நேசிப்பதும் இல்லை. மனிதரை அவர்களின் நிறைகுறைகளுடன் நாம் புரிந்து கொள்ளுவதும் இல்லை. நாள்தோறும் நாம் தனிமனிதராகி வருகின்றோம். நம் பக்கத்து வீடு நமக்கு அண்டை நாடாகி வருகின்றது. நம் பக்கத்து வீட்டு மனிதர்களை நமக்கு எதிரிகளாக நினைக்கின்றோம். இன்னும் சாதி, மதங்களைப் பேணி, பாதுகாத்து வருகின்றோம். ஆதலால் மனிதன் மனிதரை நேசிக்கும்போதுதான் மனிதநேயம் வளரும். மனிதநேயம் இல்லையெனில் மனிதனிடம் எந்த மகத்துவமும் இல்லை. நம் நாட்டு மக்களிடம் கல்வியறிவு இல்லாமையும், ஆண்கள் பெண்களை நடத்தும் விதமும் மாபெரும் கொடுமையாகும். நம் மரபில் பெண்களை உடம்பாக மட்டுமே பார்க்கின்றோம். அவர்களை மனுஷயாக நாம் பார்ப்பதில்லை. ஆண் பெண் வாழ்வைச் சமூகச் சட்டங்களும் நீதிமன்றச் சட்டங்களும் இயக்குவதால் அவர்களிடையே அன்பும், காதலும் சுதந்திரமும் இல்லை. இதனால் மனிதநேயப் பண்புகள் குறைந்து வருகின்றன. மாப்பஸான், செகாவ் போன்ற சிறுகதைப் படைப்பாளர்களின் தாக்கத்திற்கு ஆட்பட்ட பிரபஞ்சன் தன்னுடைய சிறுகதைகளில் மனித நேயச் சிந்தனைகளை அழுத்தமாக வலியுறுத்துகின்றார்.
நான் பெரியவனும் அல்லன், உத்தமனும் அல்லன். மனிதனாக வாழ்ந்து, கௌரவமாக மரிக்க வேண்டும் என்கிற வாதையே எனக்குள் மிஞ்சிக் கொண்டிருக்கிறது
எனப் பிரபஞ்சன் குறிப்பிட்டிருப்பது அவருடைய மனிதநேயச் சிந்தனையைக் காட்டுவதாகும். மேலும் அவர்,
மனிதர்களுக்காக இரங்க வேண்டாம் என்கிறது அறிவு. ஆனால் என் மனம் இரங்குகிறது. நாம் எல்லாவற்றையும் பெறத் துடிக்கிறோம். பெற்றும் விடுகிறோம். ஆனால் மகத்தானதாகிய வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். வாழ்க்கையை இழந்தும் வாழ்வா? எனக்கு இது இரங்கத் தக்கதாகவே வருகிறது. வாடிய பயிரையும் கண்டு வருந்துகிற மனோபாவம் மனிதம்
என மனிதநேயத்தைக் கோடிட்டுக் காட்டியிருப்பதும் சிந்திக்கத்தக்கது. இவ்வாறு மனிதனை நேசிக்கும் மனிதநேயச் சிந்தனைகளை உள்ளடக்கிய அவருடைய கரிய முகம், ஒரு மனுஷ’, உயிர், யாசுமி அக்கா, பாயம்மா ஆகிய சிறுகதைகளைப் பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்துவதே இப்பகுதியின் நோக்கமாகும்.
மனிதநேயம்:-
மனிதனை மனிதன் மதித்தாலும் மனித மதிப்பைப் பேணுதலே மனித நேயமாகும். மனிதனை மனிதன் மதிக்க வேண்டுமானால் முதலில் மனிதன் தன்னைப் போன்றே மற்ற மனிதர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். அன்பே இன்பத்தின் ஊற்றாகும். அவ்வின்ப ஊற்றே மனித இனத்தில் படிந்துள்ள மாசுகளை நீக்கும். மனிதனை மனிதனாக வாழ வைக்கும்.
அன்பின் வழிய துயர்நிலை அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு
என்று திருவள்ளுவர் அன்பை உலகப் பொதுமறையாக்குவார் அன்பின் அடிப்படையில் எழுந்த இக்கோட்பாட்டை ஃபிரோலே (Frolo) பின்வருமாறு சுட்டிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மனிதநேயம்; மனிதனது பெருமையையும் உரிமையையும் மதிக்கும் வகையில் அமைந்ததொரு கோட்பாடு. மனிதனின் ஆளுமைப் பண்புகளை மதிக்கவும், அவனது நலன்களைப் பேணிவரவும், சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மனிதன் முழுமையான வளர்ச்சியைப் பெறவும் துணைபுரிவது இக்கோட்பாடு. சமயம் மற்றும் இனவெறிக் கொடுமை, சமயக் காழ்ப்பு, மாற்றுக்கோட்பாட்டை வெறுத்தல் ஆகிய அனைத்து இயல்புகளையும் களைவது இக்கோட்பாட்டின் நோக்கமாகும். பொருள் முதலியவைச் சார்ந்த இக்கோட்பாடு மனித இனத்தின் விடுதலைக்காக உரத்து முழங்குவதுடன் சமயங்களையும் அதன் சடங்குகளையும் முற்றாக எதிர்ப்பது
மனிதநேயக் கோட்பாட்டின் குறிக்கோள் மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்பதாகும். மனித நேயக் கோட்பாட்டின் குறிக்கோளினை எஸ்.போபொவ் பின்வருமாறு எடுத்துக் காட்டியுள்ளார்.
1. ”மனிதனின் பெருமையினையும் உயர்வினையும் உறுதி செய்தல்.
2. எந்த மதிப்பும் மனிதனைக் காட்டிலும் பெரியது அன்று என்று உறுதி செய்தல்.
3. மனித உழைப்பிற்கு மதிப்பளித்தல்.
4. மனிதனுடைய ஆற்றலிலும் அறிவிலும் நம்பிக்கை வைத்தல்.
5. சுதந்திரமான வளர்ச்சியில் மனிதனுடைய உரிமைக்கு ஏற்ப வழங்கல் என்பதாகும்.
திருடனிடம் அன்பு காட்டும் மனிதநேயம்:-
திருடனிடம் அவனை மனிதன் என நினைத்து அன்பு காட்டுவதே மனிதநேயம்என்பதைப் பிரபஞ்சன் கரியமுகம்” (திரை) என்னும் சிறுகதையில் எடுத்துக்கூறுகின்றார். இச்சிறுகதையில் வரும் செங்கோடனும் அவன் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கும் தம்பதியினரின் வீட்டில் திருடுகின்றனர். சிறுவயது இளைஞனான செங்கோடன் மட்டும் அத்தெருவில் வாழும் மக்களிடம் அகப்பட்டுக் கொள்ளுகின்றான். ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர் மகாதேவன், அத்தெருவில் வாழும் வரதராஜன் ஆகியோர் அத்திருடனை அடித்து உதைத்துச் சித்தரவதை செய்தனர். அத்தெருவில் சாருவும் அவள் கணவனும் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனர். அந்த வீட்டின் உரிமையாளரும் அவருடைய மனைவியும் அத்திருடனிடமும் அன்புகாட்டி, அவனை அடித்து உதைத்துச் சித்தரவதை செய்யாமல் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர்.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு வீட்டுக்கார அம்மாள் வந்தாள்; அவள் கை டம்ளரில் டீ இருந்தது. என்னடி இது, என்றார் வீட்டுக்காரர், டீஆனாலும் அந்தக் குழந்தையை அப்படிப் போட்டு அடிச்சிருக்கப்படாது என்றார் அந்த அம்மாள்
இவ்வாறு திருடனிடமும் அன்புகாட்டி அரவணைக்கும் வீட்டுக்கார அம்மாவின் நற்பண்புகளைப் பிரபஞ்சன் இச்சிறுகதையில் படம்பிடித்துக் காட்டி, திருடனிடமும் அன்பு காட்டும் மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படத் துணை நடிகையின் மனிதநேயம்:-
பிரபஞ்சன் ஒரு மனுஷ’” என்ற சிறுகதையில் திரைப்படத் துணை நடிகையின் மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இச்சிறுகதையில் வரும் சேகர் என்பவன் புகைப்படக்காரன். திரைப்பட நடிகைகளைக் கவர்ச்சியாகப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்குக் கொடுத்து பிரசுரிக்கச் செய்வது அவன் தொழிலாகும். விஜயா என்ற லாவண்யா கோடம்பாக்கத்திற்கு வந்த புதிதில் சேகர்தான் அவளைக் கவர்ச்சியாகப் படம் பிடித்துச் சில பத்திரிகைகளுக்குக் கொடுத்துப் பிரசுரம் செய்து அவளைத் திரைப்படத் துறையில் துணை நடிகையாக அறிமுகப்படுத்தினான். அந்த நன்றிக் கடனுக்காக விஜயா எப்பொழுதும் உதவி வருகின்றாள். வயிற்றுப் பசியால் சேகர் விஜயாவிடம் பொய்சொல்லி பிலிம் இல்லாத கேமிராவில் படம் பிடிக்கின்றான்; இந்த உண்மை தெரிந்தும் விஜயா அவன் கேமிரா முன்பு விதவிதமாகத் தோன்றி காட்சி தருகின்றாள்; திரைப்படத் துணை நடிகையாக பிழைப்பு நடத்தும் விஜயா தன் தோழி வரலட்சுமியிடம் ஐம்பது ரூபாய் கடன்வாங்கி சேகருக்குக் கொடுத்து உதவுகின்றாள், விஜயா வரலட்சுமியிடம்,
நல்ல மனுஷங்கா படம் எடுக்கிறவரு. நான் மொதோ மொதோ, இங்க வந்தப்போ, என்னைப் படம் எடுத்தவரு இவருதாங்கா. இப்பவும் எடுத்தானா? எடுத்தாரு ஆனாஆனா….? கேமிராவில் ஃபிலிம் இல்லாமே எடுத்தாரு. கண்ணைப் பார்த்தா தெரியுதே. சாப்பிடல்லைன்னு? சோத்துக்காக நல்ல மனுஷன் பொய் சொல்றாரு. பாரு…. அதான்
என்று கூறுவதிலிருந்து விஜயா என்பவள் தான் வறுமையில் வாழ்ந்தாலும் தனக்கு உதவி செய்த சேகருக்கு நன்றிக் கடன் மறக்காமல் தன்னால் இயன்றளவு கடன்வாங்கி பணம் கொடுக்கும் திரைப்படத் துணை நடிகையின் மனிதநேயத்தை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
மிருகங்களிடத்தில் அன்பு:-
எந்த உயிர்களாக இருந்தாலும் அன்பு செய்து அரவணைக்க வேண்டும்என்ற மனிதநேயச் சிந்தனையைப் பிரபஞ்சன் உயிர்” (மனிதர்களைத் தேடி) என்னும் சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ளார். பிரபஞ்சன் சிறுகதைகள் அனைத்தும் மனிதநேயம் பேசுவன; அன்பை விதைப்பன என்பதற்கு இச்சிறுதை தக்க சான்றாகும்.
இச்சிறுகதையில் வரும் மீனா பள்ளிச்சிறுமி ஆவாள். அவள் தன் வீட்டு மொட்டை மாடியில் ஒரு அணிலுடன் நட்புகொண்டு அதற்கு லச்சுமி என்று பெயர் வைக்கின்றாள். அணிலுக்குப் பலவகையான உணவு பொருட்களைத் தின்பதற்குக் கொடுக்கின்றாள். ஆனால் அந்த அணிலை ஒரு கடுவன் பூனை அடித்துக் கொன்று தின்றுவிடுகின்றது. அதிலிருந்து கடுவன் பூனையாகிய அச்சனியனைக் கண்டு மீனா வெறுத்தாள். ஆனால் பூனை பிடிப்பவன் அக்கடுவன் பூனையை ஈட்டியால் குத்திக் கொன்றபோது மீனா அப்பூனைக்காக அழுகின்றாள்.
பூனை பிடிப்பவன், மெத்தைக் கைப்பிடி சுவரில் மறைந்து, தன் சுழிக்கொம்பைத் தூக்கி எறிந்தான். பொத்தென்று விழுந்தது பெரிய கடுவன் பூனை. வெள்ளை உடம்பு இரத்தத்தில் நனைந்து துடித்துது. மீனா அழுதாள். அதுவரை, அவள் கடுமையாக வெறுத்த அந்தப் பூனைக்காக அவள் அழுதாள்.
இவ்வாறு பிரபஞ்சன் எந்த உயிர்களாக இருந்தாலும் அவைகளிடத்தில் அன்பு செய்து அவற்றை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்னும் மனிதநேயச் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார்.
வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் மனிதநேயம்:-
யாசுமின் அக்கா” (வசந்தம் வரும்) என்ற சிறுகதையில் யாசுமின் அக்காவும் ஜெகன்பாயும் கணவன் மனைவியர் ஹஜ்ரு அவர்களுடைய மகள் ஆவாள். ஜெகன் பாய் அயல்நாட்டில் பாத்திமா என்ற பெண்ணைத் திருமணம் செய்து பின்னர் அவளை விவாகரத்துச் செய்த நிகழ்ச்சியை ஈராணி அத்தையிடமிருந்து யாசுமின் தெரிந்து கொள்கின்றாள். ஜெகன்பாய் இறந்தவுடன், யாசுமின் பாத்திமாவிற்கு ஐந்து இலட்ச ரூபாய் பணம் அனுப்ப முடிவு செய்து பாத்திமாவிற்குக் கடிதம் எழுதுகின்றாள். அதற்குப் பாத்திமா பதில் கடிதத்தில்
அக்கா உங்களுக்குத்தான் எத்தனை பெரிய மனசு. மனுசர்கள் இப்படியும் இருக்கிறதை நினைக்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அக்கா, தங்கள் கணவர் என்னை மணந்ததும் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பெயர் கஜதா இருக்கிறதும் உண்மை. இரண்டு பேரும் மனசு ஒத்து தலாக் பண்ணிக்கொண்டோம். தங்கள் கணவர் எனக்குப் போதுமான சவுகரியங்கள் செய்த பிறகே தலாக்செய்தார். நான் சந்தோஷமாக இருக்கிறேன்எனக்கு உரிமையில்லாத பணத்தைப் பெறுவது ஹராம்அல்லவா அக்கா? இக்கடிதத்தை அழுதுகொண்டு தான் எழுதுகிறேன். அக்கா, நீங்கள் ரொம்பவும் பெரியவர் அக்காஉங்கள் சகோதரியாக என்றும் இருக்க ஆசைப்படும் பாத்திமா. கடிதம் பல இடங்களில் ஈரம்பட்டு எழுத்துக் கலங்கி இருந்தது. பாத்திமாவுக்கு எந்த வகையில் பணத்தைச் சேர்க்கலாம் என்று யோசிக்கலானாள் யாசுமின் அக்கா
முடிவுரை:
பிரபஞ்சன் சிறுகதைகளில் பெரும்பாலானவை பெண்களின் நற்பண்புகளையும், உயர்ந்த குணங்களையும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. திருடனிடமும் அன்புகாட்டி அரவணைக்கும் மனிதநேயம் மக்களுக்கு வேண்டும் என்பதையும் கரியமுகம் என்ற சிறுகதையில் ஒரு பெண்ணின் மனிதநேயத்தின் மூலம் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். வறுமையில் வாழ்ந்தாலும், நன்றிக் கடன் மறக்காமல் உதவி செய்யும் திரைப்படத் துணை நடிகையின் மனித நேயத்தை ஒரு மனுஷஎன்ற சிறுகதையில் பெண்களுக்கே உரிய குணங்களில் இருந்து மாறுபட்டு நிற்கும் யாசுமினின பெருந்தகையான மனிதநேயப் பண்புகளும் போற்றுதலுக்குரியவை என்பதை ஆசிரியர் பிரபஞ்சன் பதிவு செய்வதை அறியலாம். எத்தகைய வறுமையில் இருந்தாலும் பிறர் உதவியை எதிர்பாராமல் தன் சுய உழைப்பில் வாழ வேண்டும் என்று நினைக்கும் பாத்திமாவின் நேர்மையான மனிதநேயப் பண்பு பூக்களை மதிப்பவர்கள் என்னும் சிறுகதையில் வெளிப்பட்டு இருப்பதை அறியலாம்.
நன்றி: ஆய்வுக் கோவை

No comments:

Post a Comment